அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்காக நாட்டின் பல்வேறு புனித தலங்களில் இருந்தும் புனித நீர், மண் ஆகியவை அயோத்திக்கு அனுப்பப்பட்டுவருகின்றன. இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் மூன்றும் சங்கமிக்கும் இடமான சங்கத்திலிருந்து நீர், மண் ஆகியவை எடுக்கப்பட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மூன்று நபர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரயக்ராஜ் பேசுகையில், ''விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் புனித நீர், மண்னை வைத்து பூஜை செய்து வருகின்றனர். இவற்றை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் வைக்கவுள்ளோம்.
நாட்டின் முக்கியப் புனித தலங்களான காசி விஸ்வநாதர் கோயில், கபீர் மாத் கோயில், பரத்வாஜ் ஆஷ்ரமம், சீதாமதி ஆகிய தலங்களிலிருந்து பெறப்பட்ட நீர், மண் ஆகியவை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு முன்னதாக அயோத்திக்கு அனுப்பப்படும்'' என்றார். இதனிடையே பூமி பூஜையை நடத்தவிருந்த புரோகிதருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அயோத்தியில் புதிய பள்ளிவாசல் கட்டும் பணி தீவிரம்