கண்ணூர் (கேரளா): மருத்துவப் பணியாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், செம்பேரி விமல் ஜோதி பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் உணவு, மருந்துகளை வழங்க ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘நைடிங்கேள்-19’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை கண்ணூர் மாவட்டத்தின் கோவிட்-19 நோயாளிகள் கண்காணிக்கப்படும் தனிப்பிரிவில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த ரோபோவானது ஆறு நபர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்துகளை வழங்கும் திறன்கொண்டது என்று கூறப்படுகிறது.
மொத்தமாக ‘நைடிங்கேள்-19’ 25 கிலோ எடை வரை சுமந்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோவை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட இயக்கலாம் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா: அரசு மருத்துவமனைக்கு மனித ரோபோக்கள் வழங்கிய மென்பொருள் நிறுவனம்
மேலும், இதன்மூலமாக மருத்துவர்களிடம் நோயாளிகள் பேச முடியுமாம். இந்த ரோபோ மூலம் மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்க் கிருமித் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்கிறார், இதனை உருவாக்க உறுதுணையாக இருந்த பேராசிரியர் சுனில் பால். இவர்களின் இந்த முயற்சியை மாநில சுகாதாரத் துறை வெகுவாக பாராட்டியுள்ளது.