உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பை ஏற்று புதிய ராமர் கோயிலுக்கு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறங்காவல் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. கோயில் கட்டுமான பணிகள், நிதி, நிர்வாகம் ஆகியவற்றை இந்த அறங்காவல் குழு மேற்கொள்கிறது. அதன்படி, புதிய கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியையும் இந்த குழு மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் வரை ரூ. 41 கோடிக்கும் அதிகமாக நிதி வசூலாகியுள்ளதாக இக்குழு தெரிவித்தது. இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலை மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமாராக 6 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முதலில் லக்னோவில் உள்ள இரண்டு வங்கிகளில் போலி காசோலையில் பணம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், மோசடி செய்த நபர் மூன்றாவதாக பாங்க் ஆஃப் பரோடா கிளையில் 9 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். இந்த முறை போலி காசோலை மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.