ஐந்தாவது ரைசினா மாநாடு டெல்லியில் நேற்று (ஜூன் 14) தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம், பருநிலை மாற்றம் உள்பட பல்வேறு சர்வதேச சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த மாநாட்டின் தொடக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் டென்மார்க் பிரதமரும் முன்னாள் நாட்டோ (NATO) பொதுச்செயலாளருமான ஆண்டர்ஸ் ராஸ்முசென் உள்பட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய ஆண்டர்ஸ், "சர்வதேச அளவில் மக்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் சர்வதேச அளவில் ஒரு கூட்டணியை கட்டமைக்க வேண்டும். அத்தகைய கூட்டணியில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும்" என்றார்.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் ஆஸ்திரேலிய காட்டுத்தீயால், அவரது நான்கு நாள் இந்தியப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியா பிரதமர் தனது கருத்துகளை காணொலி மூலம் அனுப்பியிருந்தார். அதில், "இந்தோ-பசிபிக் என்ற சொல்லாடலே இப்பகுதியில் இந்தியாவின் சக்தியை குறிக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், இந்தியா தனது பங்கை கணிசமாக அதிகரித்துள்ளது" என்றார்.
நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்வில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க், ஆப்கானிஸ்தான் முன்னாள்அதிபர் ஹமீத் கர்சாய், கனடா முன்னாள்பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஸ்வீடன் முன்னாள்பிரதமர் கார்ல் பில்ட், பூட்டான் முன்னாள் பிரதமர் ஷெரிங் டோப்கே, தென்கொரிய முன்னாள் பிரதமர் ஹான் சியுங்-சூ உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.