கடந்த மே ஒன்றாம் தேதி முதல் 1,074 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கி, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்விரு மாநிலங்களில் இருந்துதான் 80 சதவிகிதம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாள்களில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தச் சிறப்பு ரயில்களில் பயணித்துள்ளதாகவும், வரவிருக்கும் நாள்களில் மூன்று லட்சம் பயணிகள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களில் பயணிக்க குடிபெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கட்டணத்தை ரயில்வே மற்றும் மாநில அரசுகள் 85:15 என்கிற விகிதத்தில் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கும் திறன் தங்களிடம் உள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரு ஷ்ராமிக் சிறப்பு ரயில் 1,200 பயணிகளை அழைத்துச் சென்று வந்த நிலையில், 1,700 பயணிகள் வரை தற்போது அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் எந்தவொரு நிறுத்தமும் இல்லாமல் சென்ற இந்த ரயில்களுக்கு, தற்போது மூன்று நிறுத்தங்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் சேவைகளுக்கான செலவு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஒரு பயணத்திற்கு 80 லட்சம் வரை செலவிடப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய ஒடிசா அரசு