இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான போக்குவரத்தும் முடக்கப்பட்டதால், வெளிமாநிலங்களில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
பல்வேறு மாநிலங்களும் இது குறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தன. அதைத்தொடர்ந்து, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப மத்திய அரசு அனுமதியளித்தது. அதற்காகச் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சனிக்கிழமை மட்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக 167 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. ஒரு ரயிலுக்குச் சராசரியாக 1,200 பேர் என்ற விகிதத்தில் இதன் மூலம் 1.39 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
முன்னதாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிக்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து ரயில்வே துறைக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்கள் கைது