கரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு, முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
இது குறித்து இரு அவைகளின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில், "நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்காது. மேலும், இந்த அமர்வில் இரு அவைகளிலும் உறுப்பினர்களின் தனிநபர் மசோதாக்கள் நிறைவேற்ற அனுமதியில்லை. நேரமில்லா நேரம் முழுமையாக (ஜீரோ ஹவர்) கட்டுப்படுத்தப்படும். இரு அவைகளின் உறுப்பினர்களும் 15 நாள்களுக்கு முன்னதாக கேட்க விரும்பும் கேள்விகளை சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள பிரையன், "கரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணரும் நிர்வாகம், பொருளாதார வீழ்ச்சி என தொடரும் நெருக்கடிக்கு மத்தியில் ஒட்டுமொத்த நாடும் தவிக்கிறது. இவை குறித்த கடுமையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு அதிலிருந்து தப்பிக்க மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கும் செயல் இது. இதன் மூலமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசை கேள்வி கேட்கும் உரிமையை இழக்கிறார்கள். தொற்றுநோயை வைத்து ஜனநாயகத்தை கொலை செய்கின்றனர். 33ஆவது (1961), 93ஆவது (1975), 98ஆவது (1976) 99ஆவது (1977) அமர்வுகளின் போது கேள்வி நேரங்கள் இல்லை என்கிறார்கள். அவை யாவும் சிறப்பு நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டன" என தெரிவித்தார்.