மத்திய அரசால் புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பஞ்சாபில் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால் மத்திய அரசு சார்பாக சரக்கு ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் பொருளாதார பிரச்னைகள் அதிகமாகின.
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியினர் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் இடைப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஷ்வனி ஷர்மா கூறுகையில், ''இந்த விவகாரத்தில் மாநில அரசு அரசியல் செய்கிறது. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும். இந்தப் போக்குவரத்து தடையால், பொதுமக்கள் பெரும் பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பஞ்சாபிற்கு சரக்கு ரயில் போக்குவரத்து தடையால், ஜம்மு - காஷ்மீர் மக்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பஞ்சாப் முதலமைச்சரும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை 1,200 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க:'தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க வேண்டாம்' - அரவிந்த் கெஜ்ரிவால்