பஞ்சாப், ஜலந்தர் மாவட்டம் பமுவால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஐ., பரம்ஜீத் சிங் (45). தில்வான் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரது நண்பர் மங்கு (28). மங்குவை அவரது சொந்த ஊரில் இறக்கிவிட, பரம்ஜீத் சிங் லகன் கே படே கிராமத்துக்குச் சென்றிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியிலுள்ள ஒரு காரில் சர்வதேச கபடி வீரரான அரவிந்தர்ஜித் சிங், தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது பரம்ஜீத் சிங்குக்கும், காரில் இருந்தவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற பரம்ஜீத் சிங் தனது கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அரவிந்தர்ஜித் சிங் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார். அரவிந்தர்ஜித் சிங் நண்பர் பிரதீப் மீதும் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் அரவிந்தர்ஜித் சிங் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். பிரதீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் பரம்ஜீத் சிங்கை காவலர்கள் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டப் பிரிவுகளின் கீழ் 302 (கொலை), 307 (கொலை முயற்சி) மற்றும் 34 (இடையூறு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயிலிலிருந்து குதித்த 5 இடம்பெயர் தொழிலாளர்கள்!