நாட்டில் உள்ள குற்றங்கள், அது குறித்து பதிவாகும் வழக்குகள் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்டது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து நாடு முழுவதும் 3.5 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம். கொலை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை, தற்கொலைக்கு தூண்டுதல், திராவக வீச்சு, கடத்தல் என பல பிரிவுகள் பிரிக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 10.1 சதவீதத்துடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தடுத்து 9.4, 8.8, 7.7 சதவீதங்களுடன் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் வரிசையில் 5.8 சதவீதத்துடன் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.