முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான பிரணாப் முகர்ஜி (வயது 84), கடந்த 9ஆம் தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார்.
இதனையடுத்து, தொடர்ச்சியாக அவருக்கு தலைசுற்றலும், இடது கையில் உணர்ச்சியற்ற நிலையும் நீடித்ததாக அறிய முடிகிறது.
இந்நிலையில், 10ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டதென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றிரவே அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.