சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் கண்ணாடி அறைக்குள் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இருநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை ஜின்பிங், மோடி தலைமையில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தக உறவு இருந்ததை நினைவுப்படுத்தினார்.
"இந்தியா-சீனா உறவு நிலைத்ததன்மையுடன் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு-சீனா இடையேயும் பண்பாடு கலந்த வர்த்தக உறவு இருக்கிறது. உலகின் சிறந்த பொருளாதார சக்தியாக இந்தியாவும் சீனாவும் இருக்கிறது. இந்தச் சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு உறவுகளும் புதிய அத்தியாயம் படைக்கும்" என்று மோடி தெரிவித்தார்.