இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளைக் கையாண்டுவருகின்றன. மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக இப்பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். நகர் முழுவதும் குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்துவது, கிருமி நாசினி தெளித்து நமது சுற்றத்தை சுகாதாரமாக வைப்பது என அவர்களின் பணி இந்த இக்கட்டான சூழலில் இன்றியமையாதது.
இதனிடையே இன்று உலகம் முழுவதும் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தத் தினத்தில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்வது மட்டுமல்லாமல், கரோனாவுக்கு எதிரான போரில் தைரியமாகப் போரிடும் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இந்நாளில் சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை நாம் பின்பற்றுவதை உறுதி செய்து நம்முடைய வாழ்க்கையையும், பிறரின் வாழ்க்கையையும் பாதுகாப்போம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் தகுதிகளில் கவனம் செலுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த நாள் ஊக்குவிக்கும்” என பதிவிட்டுள்ளார்.