கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் “தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும் குழந்தைகளையும் தம் கிராமங்களை நோக்கி நடந்தே போகும் வேலையில்லாத தொழிலாளர்களையும் அரசு பார்க்கவில்லையா?
ரூ.5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ.1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன சொல்வது, இதற்குக் காரணம் அரசின் அறியாமையா, அரசுக்குச் சொல்லப்படும் தவறான யோசனைகளா, நிர்வாகத் திறமையின்மையா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிவு மேலும் “அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டால் பணத்தை 'உருவாக்கும்' அதாவது அச்சடிக்கும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுகளுக்குக் கிடையாது.
இது அவசர, போர்க்காலச் சூழ்நிலை. எனவே மாநில அரசுகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாகத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்
இதையும் படிங்க...மகாபாரதம் பார்க்கும் பதிவை நீக்கிய மத்திய அமைச்சர்: காரணம் என்ன?