கரோனா வைரஸ் நோயின் தாக்கம் காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இருப்பிடம், உணவு உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு செய்து தர அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனித உரிமை செயல்பாட்டாளர் மேதா பட்கர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கடந்த 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிக்கை சமர்பிக்க கோரியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று தொடங்கியது. வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா, "நாடு முழுவதும் ஒரு கோடி குடிப்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக ஏற்பாடு செய்துள்ளது. 41 லட்சம் சாலை போக்குவரத்து வழியாகவும், 57 லட்சம் ரயில் பாதை வழியாகவும் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடிப்பெயர்ந்த மக்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக தேவையான எண்ணிக்கையிலான ரயில்களை குறித்து தெரியப்படுத்த வேண்டுமென தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கையின் பேரில், மத்திய அரசு 24 மணி நேரத்திற்குள் ரயில்களை ஏற்பாடு செய்து வழங்குகிறது. " என தெரிவித்தார்.
அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்த அறிக்கையில், "மகாராஷ்டிராவில் இருந்து 11 லட்சம் குடிப்பெயர்ந்தோர் வெளியேறியுள்ளதாகவும் 38,000 பேர் மீதமுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு இதுவரை 802 ரயில்களை அங்கு மத்திய அரசு இயக்கியுள்ளது.