உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பல தலைமுறையினர் ராமர் கோயில் கட்டுவதற்காக பல நூற்றாண்டுகளாக தன்னலமற்ற தியாகங்களை செய்துள்ளனர். இந்நாளில் நாட்டின் 130 கோடி மக்கள் சார்பாக, ராமர் கோயில் கட்டுமானத்திற்கு வழிவகுத்த அவர்களின் தியாகங்களுக்கு நான் வணக்கம் செலுத்தி, வணங்குகிறேன்" என அவர் கூறியிருந்தார்.
மக்கள்தொகையை தவறாக கூறிய பிரதமருக்கு இந்த திருத்தம் உதவும் - சசி தரூர்
டெல்லி : இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியல்ல, 130 கோடியே 4 ஆயிரத்து 385 என ஐ.நா சபையால் மதிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஷி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "ராமர் கோயில் 'பூமி பூஜை' விழாவின் போது 130 கோடி இந்தியர்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியதாக அறியமுடிகிறது. ஆனால் 2020ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியே 4 ஆயிரத்து 385 என மதிப்பிடப்படுவதாக ஐ.நா.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
138 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் மக்கள் தொகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடு மூலமாக 8 கோடி மக்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடுபடுதல் பலருக்கு கவலை அளித்துள்ளது. கவனக்குறைவாக இருந்தால், ஒரு திருத்தம் உறுதியளிக்கும்"என்று அவர் கூறினார்.