புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் 3ஆவது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது சம்பந்தமாக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறும்போது, " வரக்கூடிய பருவ மழை புயலாக மாற வாய்ப்புகள் உள்ளன. மிகப்பெரிய மழை, வெள்ளம் வந்தால் தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றவும், பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவு வழங்கவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மருத்துவத்துறை சார்பாக டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கினால் மோட்டார் மூலம் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு தடுப்பு ஊசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” என்றார்.