கரோனா வைரஸ் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்ததாக வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உணவு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்த அவர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான தேவைகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில், அதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.