கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது திரையரங்குகள், உயிரியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களையும் மூட அரசு உத்தரவிட்டது.
இதனால் மக்கள் நான்கு சுவரின் இடையே, தங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இந்நிலையில், பிகார் மாநிலம், பாட்னாவிலுள்ள உயிரியல் பூங்கா காணொலிக் காட்சி வழியே பூங்காவைச் சுற்றிப் பார்க்கும் திட்டத்தை, கடந்த வாரம் தொடங்கியது.
பிகார் மாநிலத்தின் வனத்துறை சார்பில், கடந்த வாரம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை ஆறு காணொலிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது. DEFCC Official என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்படும், இந்த காணொலிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக பிகார் வனத்துறையின் முதன்மைச் செயலர் தீபக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "இதுவரை நாங்கள் வெளியிட்டுள்ள ஆறு காணொலிகளை உலகம் முழுவதுமிருந்து ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். இதில் புலிகள், பறவைகள், காண்டாமிருகம், குரங்குகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் உள்ளிட்டவற்றின் வாழ்வு குறித்து விளக்கியுள்ளோம்.
இதன் மூலம் விலங்குகள் குறித்து குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. பாட்னா உயிரியல் பூங்கா சுமார் 800க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வசிப்பிடமாக இருக்கிறது. நாங்கள் வெளியிடும் காணொலிகளில் விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், இனப்பெருக்கம், விலங்குகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையாளர்களால் அறிந்துகொள்ள முடியும்.
கடந்த காலங்களில் பாட்னா உயிரியல் பூங்கா எந்த சூழ்நிலையிலும் இவ்வளவு காலம் மூடப்பட்டதில்லை. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கை வெல்ல மக்களுக்கு உதவும் வகையில், இதை நாங்கள் தொடங்கினோம். இது விலங்குகள், பறவைகள் குறித்து புதிய விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிறது" என்றார்.
இதையும் படிங்க: 'ஆரோக்கிய சேது செயலியில் பயனாளர் தகவல்களுக்குப் பாதுகாப்பில்லை'