உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கரோனா தொற்று. யாரையும் விட்டுவைக்காமல் சாமானியன் தொடங்கி, மக்கள் பிரதிநிதி வரை அனைவரையும் தாக்கிவருகிறது. இதற்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகளிலுள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் விழிபிதுங்கி போயுள்ளனர்.
இது ஒருபுறம் என்றால் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒவ்வொரு மக்களின் பொருளாதாரத்தையும் பாதித்து, நிர்கதியாக்கியிருக்கிறது. நாம் வாழும் சம காலத்தில் இப்படியான ஒரு சுகாதார நெருக்கடியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஊரடங்கால் வீட்டிலேயே அனைவரும் முடங்கியிருப்பதால் கரோனா குறித்த அப்டேட்களை விரல் நுனியில் வைத்திருக்கிறோம். இன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று காண மாநில அரசின் அறிவிப்புக்காக தினமும் தொலைக்காட்சி முன்பும், செல்போன் திரை முன்பும் நம் விழிகளை அகல விரித்து உற்றுநோக்குகிறோம்.
ஆனால், விழித் திறனற்றோர் இந்தத் தகவல்களை எல்லாம் எப்படி தெரிந்துகொள்வார்கள். அதுகுறித்து தெரியாமல் எப்படி அவர்களால் கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட முடியும்?
இந்தக் கோணத்தில் யாராவது யோசித்திருக்கிறமோ? அவ்வாறு யோசித்த இந்திய பார்வையற்றோர் நல அமைப்பு, பிரெய்லி எழுத்து முறையில் கரோனா குறித்த ஒரு புத்தகத்தை உருவாக்கியுள்ளது. ஆம், 1500 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள இந்திய பார்வையற்றோர் நல அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரெய்லி எழுத்து முறை பார்வைத்திறனற்றவர்கள் தடவிப் பார்த்து படிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு எழுத்து முறையாகும். இதன்மூலம், பார்வைத் திறனற்ற ஏராளமானோர், கரோனா குறித்த தகவலை எளிதில் அறிந்துகொள்ளலாம் என்கிறார் அந்த அமைப்பின் தலைவர் அருண் பாரஸ்கர்.
உலக நாடுகளில் கரோனா பாதிப்பில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கரோனா தாக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 19 ஆயிரத்து 693 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறு ஆயிரத்து 619ஆக உயர்ந்திருக்கிறது. எட்டு ஆயிரத்து 822 பேர் உயிரிழந்துள்ளனர். நாசிக் மாவட்டத்திலும் சில நாள்களாகக் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோவல் - வாங் யி பேச்சுவார்த்தை: படைகளை விலக்கி கொண்ட இந்தியா, சீனா!