பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே கரோனா எதிரொலியால் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றம் மக்களுக்கும் இன்னும் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இந்நிலையில், தினந்தோறும் உயர்ந்துகொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டிக்கும் விதமாக, விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்தார்.
நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வரும் எம்.பி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ”இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாடாளுமன்றத்திற்கு மிதிவண்டியில் வந்தேன். இந்த நாட்டினுடைய மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு குறைக்க வேண்டும். ஏழை மக்களிடம் அடிக்கின்ற கொள்ளையை தடுக்க வேண்டும்” என்றார்.
எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்ட காணொலி மாணிக்கம் தாக்கூர் உடன் இணைந்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கே.சி.வேணுகோபாலும் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு வந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நியாயப்படுத்த முடியாத பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அடையாள போராட்டமாக இன்று மிதிவண்டியில் நாடாளுமன்றத்திற்கு வந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின்போது நிகழும் பெட்ரோல் - டீசல் விலை ஏற்றம் நியாயமானதா? - சிறப்புக் கட்டுரை