கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு பின் மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு தொழில் துறையைப் புதுப்பிப்பது குறித்த திட்டங்களை வகுக்க வல்லுநர் குழுவை அமைக்கவுள்ளதாகப் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
பல்வேறு பொருளாதார மற்றும் தொழில் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அடுத்த ஓர் ஆண்டில் செய்ய வேண்டிய குறுகிய காலத் திட்டம், நிதி மேலாண்மை உள்ளிட்ட நடுத்தர கால திட்டங்களையும் பரிந்துரைக்கும்.
இந்நிலையில், 20 வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக கலைக்கப்பட்ட திட்டக்குழுவின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார். வல்லுநர் குழுவை தலைமை தாங்க தங்கள் அழைப்பை ஏற்றதற்கு அலுவாலியாவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.