ரயில்வே துறையில் நீண்ட நாள்களாகப் பணியாற்றி, இந்தாண்டு ஓய்வுபெறும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் நடைபெறவிருந்த விழாவானது கரோனா தொற்று காரணமாக காணொலிக் காட்சி வழியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவானது ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே துறை இணை அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் அங்காடி, ரயில்வே வாரியச் செயலர் ஸ்ரீசுஷாந்த் குமார் மிஸ்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், "இந்நாள் மகிழ்ச்சியான மற்றும் சோகமான நாள். ரயில்வே ஊழியர்கள் வெவ்வேறு பகுதிகள், பொறுப்புகள் ஆகியவற்றில் நீண்ட காலம் பணியாற்றி சிறப்பான பங்கு வகித்துள்ளனர். ரயில்வே துறையை மேம்படுத்த உழைத்த உங்களின் பணிகள் எப்போதும் நினைவுகூரப்படும். கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறை முன்னெற்றம் கண்டுள்ளது.
கரோனா காலகட்டத்திலும் சரக்கு ரயில்கள், பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. இந்த ஓய்வூதியம் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு இடைநிலை ஆகும். நமது வாழ்க்கையின் சிறிது நேரத்தை ஒதுக்கி, நாட்டுப் பணியில் ஈடுபட்டால் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
அடுத்த தலைமுறைக்குச் சிறந்த நாட்டை அளிக்க முடியும். மழைநீர் சேகரிப்பு, ஈரமான கழிவுகளிலிருந்து எரு உற்பத்தி, விவசாயிகளின் அறுவடை உற்பத்தியை அதிகரிக்க புதுமையான வழிகளைப் பற்றி சிந்திப்பது போன்ற சமூகத்தில் வெளிப்படையான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்" என்றார்.