தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யின் 1000 பேருந்துகள் விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் வழங்கியுள்ள 1000 பேருந்துகளின் எண்களில் பல போலியானது என்று குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Migrants bus
Migrants bus

By

Published : May 20, 2020, 2:21 PM IST

உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்வேறு ஊர்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரப் பிரதேச அரசுக்கு ஆயிரம் பேருந்துகளை வழங்க காங்கிரஸ் தயாராகவுள்ளதாக மே 16ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தார்.

பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட உத்தரப் பிரதேச அரசு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள், நடத்துநர்களின் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து பேருந்துகளின் தகவல்களை காங்கிரஸ்உத்தரப் பிரதேச அரசுக்கு அளித்தது.

காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளதாகச் சமர்ப்பித்துள்ள பேருந்து எண்களைச் சரிபார்க்கும்போது அவற்றில் சுமார் 100-க்கும் மேற்பட்டவை இரண்டு, மூன்று சக்கர வாகனங்கள் என்றும் சுமார் 295-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குச் சரியான உரிமம் இல்லை என்றும் உத்தரப் பிரதேச அரசு குற்றஞ்சாட்டியது.

அரசுக்குத் தவறான தகவல்களை அளித்ததாக, உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உ.பி. அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "இதுபோன்ற நிகழ்வுகளில் சில தவறுகள் நடப்பது இயல்பு. காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 1059 பேருந்துகளில் 879 பேருந்துகளின் எண்கள் சரியானவை. விரைவில் மற்ற பேருந்துகளின் எண்களையும் ஒப்படைத்துவிடுவோம்" என்றார்.

மேலும், அரசு வேண்டுமென்றால் இருபுறங்களிலும் பாஜகவின் பேனர்களை ஒட்டிக்கொள்ளலாம் என்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் துயரத்தில் இருக்கும்போது இப்படி அரசியல் செய்வது சரியல்ல என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

தற்போதுவரை உத்தரப் பிரதேச அரசு அனுமதியளிக்காத காரணத்தால் பேருந்துகள் ராஜஸ்தான்-உத்தரப் பிரதேச எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட செயலர் சந்தீப் சிங் கூறுகையில், "நாங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மே 19ஆம் தேதி காலை முதல் காத்திருக்கிறோம்.

மாநிலத்தில் நுழைய காவல் துறையினர் தொடர்ந்து அனுமதி மறுக்கின்றனர். இன்று மாலை நான்கு மணிவரை காத்திருக்க முடிவுசெய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஊர்களில் சிக்கித் தவித்துவரும் சூழ்நிலையில், அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் அதை வைத்து அரசியல் நடந்துகொண்டிருப்பதை மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையும் படிங்க:'சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களின் தேவையை மாநில அரசு புரிந்து நடக்கவேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details