மணிப்பூர் மாநிலத்தில் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்த மாநிலத்திலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அந்தப் பதவிக்கான தேர்தல் ஜூன்19ஆம் தேதி நடந்தது.
இதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக பாஜக அரசில் அங்கம் வகித்த துணை முதலமைச்சர், மூன்று அமைச்சர்கள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டனர்.
இதற்கு முன்னதாக பாஜக உறுப்பினர்கள் மூன்று பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸூக்கு தாவினார்கள். இதனால் பாஜக அரசு ஆட்டம் கண்டது.
மாநிலங்களவை தேர்தலுக்கு 24 மணி நேரமே இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் தலைமையில் ஆளுநரை சந்தித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள்.
மேலும் சிறப்பு சட்டப்பேரவை அமர்வை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வெற்றியை பதிவு செய்தது. பாஜக வேட்பாளர் லீசெம்பா சனாஜோபா 28 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சிபாபுவை தோற்கடித்தார்.
மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பைரன் சிங், “அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் பயணிக்க விரும்புகின்றனர். அந்த வகையில், எங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரின் ஆதரவு உள்ளது” என்றார்.
மணிப்பூரில் 2017ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களை வென்று தனிபெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. அப்போது, இரு மாநிலக் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
தற்போதுள்ள நிலவரப்படி மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பலம் 49 ஆக குறைந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற 25 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு 26 பேரும், பாஜகவுக்கு 23 பேரின் ஆதரவும் உள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் மாநிலங்களவை தொகுதியை பாஜக வென்றதை அடுத்து முதலமைச்சர் பைரன் சிங் மேற்கண்டவாறு பேசியுள்ளார். இதனால் அம்மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திரா; ஜெகன் அலையில் சிக்கிய நாயுடு!