தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மனிதன் - யானை பிரச்னை: தீர்வைத் தேடும்  சூழலியலாளர்!

மனிதனுக்கும் யானைகளுக்குமிடையேயான மோதல்களைத் தடுக்க, மலைச்சரிவில் யானைகளுக்கான உணவுகளைப் பயிரிட்டு வழங்கிவரும் சூழலியலாளர் பினோத் துலு போரா குறித்த சிறு செய்தித் தொகுப்பைக் காணலாம்.

man elephant conflict

By

Published : Nov 7, 2019, 12:16 PM IST

Updated : Nov 7, 2019, 1:48 PM IST

மனிதனுக்கும் யானைகளுக்குமிடையேயான மோதல்களைத் தடுக்க சூழலியலாளர் பினோத் துலு போரா எனும் இளைஞர் மலைச் சரிவுகளில் யானைகள் உண்பதற்குத் தேவையான அரிசி, புல், கரும்பு, வாழை ஆகியவற்றை பயிரிட்டு அவைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வராமல் தடுத்துவருகிறார். இதனால் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் யானைகள் விளைநிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என்று நம்புகிறார் பினோத்.

யானைகளுக்கும் மனிதனுக்குமிடையேயான மோதல்கள் காலங்காலமாக நடந்துவருகின்றன. இதனால் இரு உயிர்களுக்கும் பெருமளவு அச்சுறுத்தல் இருப்பது உண்மை. இங்குப் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் பாதுகாப்பது அனைவரின் மிகப்பெரிய கடமையாகும். இக்கடமையைச் சிறப்பாக தன் சீரிய முயற்சியால் நிகழ்த்திவருகிறார் சூழலியலாளர் பினோத் துலு போரா.

யானைகள்

அஸ்ஸாம் மாநிலத்தின் திஸ்பூரிலிருந்து 110 கிமீ தொலைவில் இருக்கும் நாகான் மலைக் கிராமத்தில் நடக்கும் மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையிலான மோதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், யானைகள் உணவிற்காக விவசாய நிலங்களில் புகுந்து, அனைத்து பயிர்களையும் நாசமாக்கிச் செல்வது வாடிக்கையாக இருந்தது.

நாகானில் பல மரணங்களையும் விவசாயிகளின் இழப்புகளையும் சரிகட்ட பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் எந்த முயற்சியும் பயனற்றதாகவே இருந்தது. இந்தச் சூழலில் போரா இங்குக் களம்கண்டார். இம்மக்களின் துயரத்தைப் போக்கி, யானைகளைப் பாதுகாக்கவும் பல கட்ட ஆய்வுகள் நடத்தி, தனது யோசனையைச் செயல்படுத்திவருகிறார்.

விவசாய நிலத்தில் யானைகள்

ஆம், மலைச்சரிவுகளில் யானைகளுக்கு வேண்டிய பயிர்களை; அதாவது நெல், கரும்பு, வாழை போன்றவற்றையும், நீரோடைகளையும் உருவாக்கி யானையை மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வராமல் பார்த்துக்கொள்கிறார். இதன் பரப்பளவு சுமார் 81 ஏக்கர் நிலம் என்று கூறப்படுகிறது. இந்தச் சீரிய பணியை போராவின் மனைவி உள்பட சூழலியல் ஆர்வலர்கள் பலர் இணைந்து குழுவாகச் செயல்படுத்தியுள்ளனர்.

நாம் வாழும் இக்காலச் சூழலில் மனிதம் மரித்துப்போனது என்னும் புலம்பலை அன்றாடம் கேட்க நேரும். ஆனால் போரா போன்ற சூழலியல் ஆர்வலர்கள், இப்பேற்பட்ட பெரும் பணியைச் செய்துவருவது மனிதத்தின் எச்சங்கள் இன்னும் புவியில் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

மனிதன் - யானை பிரச்னை: தீர்வைத் தேடும் இயற்கையியலாளரின் செயல்
Last Updated : Nov 7, 2019, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details