தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா தெஹ்ஸில் உள்ள வனப்பகுதியில் இருந்து பெரிய அளவிலான வெடிபொருட்களை மீட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை செய்தித்தொடர்பாளர் நேற்று (செப் 17) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; 'உள்ளூர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, இந்திய ராணுவத்தின் 42 ஆர்ஆர், 130 பிஎன் மத்திய ரிசர்வ் காவல் துறையினர் ஆகியோருடன் இணைந்து காதிக்கல் கிராமத்திற்கு அருகிலுள்ள நர்சரி பகுதியில் கூட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் சிறப்புத் தகவலின்படி, பில்வார் தெஹ்ஸில் மல்ஹார் பெல்ட்டின் தேவால் கிராமத்தில் உள்ள கலீல் என்பவரின் வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அவர்கள் வருவதைக் கண்ட கலீலின் மனைவி, துப்பாக்கி, வெடிபொருட்களை வெளியே எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளார்.
அதன்பின்னர் தேடுதலின்போது, புதைத்து வைக்கப்பட்டிருந்த தலா 20 கிலோ எடையுள்ள பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்களை மீட்டதன் மூலம் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் பயங்கரவாதிகளின் பெரிய அளவிலான சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவியை (ஐ.இ.டி) பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்ததால் ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.