பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
முதலமைச்சருடன் மோதல்: மோடியுடன் இணக்கம்...!
பாட்னா: பாஜக உடனான கூட்டணி தொடர்ந்தாலும், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் தேர்தலில் போட்டியிட இயலாது என லோக் ஜனசக்தி பரிஷத் கட்சி அறிவித்துள்ளது.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட உள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் போட்டியிட இயலாது என லோக் ஜனசக்தி பரிஷத் கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் கூறுகையில், " ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கொள்கை முரண் இருக்கும் காரணத்தால் அக்கட்சியின் தலைமையில் தேர்தலில் போட்டியிட மாட்டோம். இருப்பினும் பாஜக உடனான வலுவான கூட்டணி தொடரும்" என்றார்.