தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கரோனா தொற்று கண்டறியக்கூடிய கருவிகள் போதுமான அளவில் இல்லாததால் கரோனா நோயாளிகளும், கரோனா அறிகுறி இருப்பவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில், கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், சில இடங்களில் கரோனா சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. சில நபர்களுக்குக் கரோனா தொற்று இருப்பதாகக் கூறி, மருத்துவ உபகரணங்கள் கொடுத்து அனுப்பும் ஊழியர்கள் ஒரிரு நாள்களில் அவருக்கு கரோனா தொற்று இல்லை எனக்கூறும் புதிய பிரச்னையும், ஹைதராபாத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் 'ரேபிட்' சோதனை நடத்தப்பட்டுவருகிறது. சனிக்கிழமை (ஜூலை.25) 3,787 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ உபகரணங்களின் பற்றக்குறையால்தான் குறைந்தளவில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சோதனை மையங்களில், நாளொன்றுக்கு 200 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்ய முடியும்போது, வெறும் 50 பேருக்கு மட்டுமே தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா அறிகுறியோடு இருப்பவர்கள், இதனால் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். சோதனை செய்வதை முற்றிலும் நிறுத்திய ஆரம்ப சுகாதார நிலையங்கள், சோதனை மையங்களுக்கு ஓரிரு நாளில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுவிடும் என, அரசு தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'கோவிட் பரவலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' - ஆளுநர் கிரண்பேடி!