கேரளாவின் முக்கியப் பண்டிகையான ஓணம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஓணம் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரோனாவால் பூக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவின் ஃபேஷன் டிசைனர் ஒருவர் புதுமையான முறையில் பூக்கோலமிட முயற்சி செய்துள்ளார்.
ஓணம் ஸ்பெஷல் : கண்களைக் கவரும் ’சாக்லெட் பழ’ பூக்கோலம்!
திருவனந்தபுரம் : கேரளாவில் ஃபேஷன் டிசைனர் ஒருவர், சாக்லேட், காய்ந்த பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு பூக்கோலத்தை அலங்கரித்தது பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கேரள மாநிலம் குரிச்சிபரம்பிலனில் வசிக்கும் ஜார்ஜ் ஆண்டனி என்னும் இவர், தனது குடும்பத்துடன் இணைந்து சாக்லேட், காய்ந்த பழங்கள் ஆகியவற்றின் மூலம் பூக்கோலத்தை வடிவமைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டனி கூறுகையில், "கரோனா கட்டுபாடுகள் இருப்பதால் பூக்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு அச்சம் உள்ளதால் பூக்கடை முன்பு மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்குமாறும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதைக் கருத்தில் கொண்டு, 16 கிலோ எடை கொண்ட சாக்லேட், காய்ந்த பழங்கள் மூலம் பூக்கோலத்தை வடிவமைத்துள்ளோம். இதை செய்து முடிப்பதற்கு பல மணி நேரங்கள் ஆனது. இந்த வண்ணமயமான, இனிமையான பூக்கோலத்தை கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் களப்பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.