குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு சார்பில், ஆளுநருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 13ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தது. இதுதொடர்பாக உரிய அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆளுநர் மாளிகை கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து ஆளுநர் ஆரிஃப் முகமது கானை தலைமைச் செயலர் டாம் ஜோஸ் இன்று சந்தித்து வாய்மொழி விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தொடர்பாக எவ்வித விதிமுறை மீறலும் நடக்கவில்லை என ஆளுநருக்கு, தலைமைச் செயலர் விளக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை மோதல் நடந்துவருகிறது. ஜனநாயகத்தில் எதிர்க்கருத்துகள் இயல்பானதுதான் என்றாலும் ஒரு மாநில முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது என்று ஆளுநர் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தேசாபிமானியில் ஆளுநரின், 'அரசியல் விளையாட்டு' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியானது. இந்தக் கட்டுரை வாயிலாக ஆளுநரின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. வழக்கு: பினராயி விஜயன் அரசு அறிக்கை அளிக்க ஆளுநர் மாளிகை உத்தரவு