கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவித்து வரும் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வசந்தகுமார் பிரதமரிடம் நேரில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். மீனவர்கள் ஈரானுக்குச் சொந்தமான மூன்று தீவுகளிலிருந்து மீன்பிடிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், கொரோனா வைரஸ் பரவி வருகின்ற இந்தச் சூழலில் மீனவர்களின் முதலாளிகளான அரேபியர்கள், அவர்களைத் தங்கள் இடத்திலிருந்து வெளியேறுமாறும் ஆழ்கடலுக்குச் செல்லுமாறும் நிர்பந்தித்து வருகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர், உடுத்த உடை ஆகியவை கிடைக்கவில்லை. இத்தகையச் சூழலில் தமிழர்கள் ஈரான் நாட்டிற்குள் செல்ல முடியாமலும், கடலுக்குள் செல்ல விருப்பமில்லாமலும் தவித்து வருகின்றனர்.
இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் என்பதே அவர்களுடைய தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, மத்திய அரசு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎஸ் விமானத்தை அனுப்பி ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் தனது மனுவில் கூறியுள்ளார். தனது மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்றும் வசந்தகுமார் கூறியுள்ளார்.