அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது மாமா கோபாலன் பாலசந்திரன், இது தொடர்பாக தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
தமிழ் ஊடகங்களுக்கு பேட்டியளித்த கோபாலன், கமலாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருத்தமற்ற பெயர்களைச் சொல்லி அழைத்துவந்தார். இனிவரும் காலங்களில் அவர் ‘இந்தியன் கமலா’ என அழைப்பார் என்றார்.
மேலும் அவர், கமலா என் தங்கை ஷியாமளாவின் மகள். நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன், அப்போது கலிபோர்னியாவின் அரசு வழக்குரைஞராக இருந்தார். அவர் இந்தியாவில் வளர்ந்தவர் அல்ல. அவர் தனது தாத்தா பாட்டியை சந்திக்க சென்னைக்கு ஒருமுறையும், சண்டிகருக்கு ஒருமுறையும் வந்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு நான் அமெரிக்கா சென்றபோது, கமலாவுடன் சான் பிரான்சிஸ்கோ வீதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன்.
நான் அமெரிக்க சென்றபோது, வாங்க மாமா நாம ஊர் சுற்றப் போகலாம் என கமலா கூறினார். நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் சான் பிரான்சிஸ்கோவின் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பல இடங்களை சுற்றினோம். அது மறக்க முடியாத நினைவுகள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 1958ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெறுவதற்காக என் தங்கை ஷியாமளா எங்களை விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின் மேற்படிப்புக்காக கலிபோர்னியா சென்றவர், அங்கேயே திருமணம் முடித்துக்கொண்டு தங்கிவிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் கமலாவுக்கு மொபைலில் கூட அழைக்கவில்லை. மெயில் அனுப்புவதையும் தவிர்த்துவிட்டேன், அவரது அரசியல் எதிரிகள் அதை ஹேக் செய்ய வாய்ப்புண்டு.
இந்தத் தேர்தலில் கமலா நிச்சயமாக வெற்றிபெறுவார் என எங்கள் குடும்பத்தார் நம்புகிறோம். கரோனா ஊரடங்கு முடிந்ததும் அவர் வெற்றியைக் கொண்டாட நான் அமெரிக்கா செல்வேன் என்றார்.
கமலா ஹாரிஸின் சித்தி சரளா கோபாலன், கமலா தனது வேர்களை மறக்காதவர். எப்போது கால் செய்தாலும் என்னை சித்தி என்றுதான் அழைப்பார். தென்னிந்திய உணவுகள் என்றால் அவருக்கு அளாதி பிரியம் என்கிறார்.