தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 4, 2020, 7:46 PM IST

ETV Bharat / bharat

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப் போராட்டம்!

டெல்லி: இந்திய ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து டெல்லி தலைமையகத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப்போராட்டம்!
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாணப்போராட்டம்!

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்பட இருப்பதாக மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதை நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அந்த வகையில் மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் இன்று (ஜூலை 4) அக்கட்சியின் டெல்லி தலைமையகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊடங்களிடையே பேசிய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹரிஷ் பவார், " ரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டால் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கிடைக்கும்; செல்ல வேண்டிய இடத்தை மிகவும் குறைந்த நேரத்தில் சென்றடைந்து விடலாம் என்று மக்களை மயக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுகின்றன. அதேநேரத்தில் ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

தற்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்து ரயில்வே துறை ஓரளவு சமாளிக்கிறது. தனியார் ரயில்கள் இயக்கப்படும் போது இந்த ரூ. 42,000 கோடி இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக ரயில் கட்டணம் 28 விழுக்காடு முதல் உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி, ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவிருப்பதால், அவை அளவுக்கு அதிகமான கட்டணங்களை நிர்ணயித்து கொள்ளையடிக்கும்.

இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது. எனவே, தொடர்வண்டித்துறை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச் செய்து, அதை லாபத்தில் இயக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். ரயில் சேவைகளை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசும், ரயில்வே வாரியமும் கைவிட வேண்டும்" என கூறினார்.

டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸார் தற்போது மந்திர் மார்க் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details