மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், 'குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. இதை பாஜக பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் எதிர்கொள்ள இதுபோன்ற மலிவான வழியை எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் எதையும் இழக்கப்போவதில்லை.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளபோது, இங்கு நிலவும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சரியானது இல்லை. சிஏஏ-வுக்கு எதிராக ஏன் இத்தனை கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும். டெல்லியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
கிஷண் ரெட்டி செய்தியாளர் சந்திப்பு பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்க முயலும் யாரையும் மத்திய அரசு மன்னிக்காது. டெல்லியில் மீண்டும் ஒரு வன்முறை நிகழ அனுமதிக்க மாட்டோம். என்ன ஆனாலும் எக்காரணத்தைக் கொண்டும் சிஏஏ திரும்பப் பெறப்படமாட்டாது' என்றார்.
இதையும் படிங்க: தேவைப்பட்டால் டெல்லியில் ராணுவம் களமிறக்கப்படும் - கெஜ்ரிவால்