தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

7 மணி நேர பரபரப்புக்கு பின் தலைமை குறித்து காங்கிரஸ் கண்ட தீர்வு என்ன?

காங்கிரஸ் தலைமை தொடர்பாக அக்கட்சி நடத்திய காரிய கமிட்டி கூட்டம் குறித்து மூத்த செய்தியாளர் அமித் அக்னிஹோத்ரி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

Sonia
Sonia

By

Published : Aug 26, 2020, 3:16 PM IST

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில், ஒருவழியாக கட்சிக்குள் நிலவி வந்த பல்வேறு குழப்பங்கள் களையப்பட்டு தெளிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைவர் பதவிக்கான சிக்கலுக்கு விடை காணப்பட்டுள்ளது.

கூட்டத்தின் முடிவில், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பிற்கு தயாராகும் வரை சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தலை நடத்துவதற்கும் தேதி குறிப்பிடாமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவைத் தான் காங்கிரஸ் கமிட்டி எடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காங்கிரஸின் அனைத்து மூத்த தலைவர்களைக் கொண்ட காரிய கமிட்டியால் இந்த முடிவுகளை எப்போதும் போல விரைந்து எடுத்திருக்கலாம். ஆனால் எதற்காக 7 மணி நேரம் எடுத்துக் கொண்டனர் என்று பலதரப்பிலும் தற்போது விவாதிக்கப்படுகிறது.

பல மணி நேரம் நடந்த காணொளிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மோதல் போக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

குறிப்பாக, மூத்த தலைமுறை தலைவர்களுக்கும், இளைய தலைமுறை தலைவர்களுக்கும் இடையிலான விரிசல் பெரிதாக வெடித்திருப்பதை, காரியக்கமிட்டியில் தெளிவாகக் காண முடிந்தது. இதன் காரணமாகவே, கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்தது முதல் இன்று வரை ஆறு ஆண்டுகளாகியும், பாரதிய ஜனதாவிற்கு எதிராக கட்சிக்குள் தேசிய அளவிலான ஒருமித்த திட்டத்தை காங்கிரஸால் இன்றும் கட்டமைக்க இயலவில்லை.

காரியக்கமிட்டி கூட்டத்தில் மிக முக்கிய விவகாரமாக, கடந்த ஜூலை மாதம் 23 காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியை பலப்படுத்த முழு நேர தலைவர் தேவை என்ற கோரிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கோரிக்கைகள் நியாயமானது என்பதை புரிந்து கொண்டாலும், உடல்நல சிக்கல்களால் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டு கால இடைக்காலத் தலைவர் பதவியை தொடர விரும்பவில்லை என்று சோனியா காந்தி தெரிவித்திருந்தார், ஆனால் தலைவர்களின் வற்புறுத்தலால் நிரந்தர தலைவரை தேர்வு செய்யும் வரை இடைக்காலத் தலைவராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைவர் பதவிக்கான போட்டியைக் காட்டிலும், காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கள் தான் காரியக் கமிட்டியில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸின் புகழ் வெளிச்சம் சற்று மங்கியிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.

இந்த குழப்பநிலையை காங்கிரஸ் தரப்பு மறுத்தாலும், மூத்த தலைவர் கபில் சிபலின் ட்விட்டர் பதிவு வெட்ட வெளிச்சமாக்கியது. காரியக் கமிட்டியில் கபில் சிபல் கலந்துகொள்ளாத நிலையில் பரபரப்பு மேலும் அதிகமாகியது. ஆனால் ராகுல் காந்தி தொலைபேசி மூலம் கபில் சிபலை தொடர்பு கொண்டு பேசியதை அடுத்தி, அந்த ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது இருப்பினும் சலசலப்புகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவை நீக்கியதும் சற்று ஆறுதல் அடைந்த காங்கிரஸ் மேலிடத்திற்கு, மேலும் நெருக்கடியை மூத்த தலைவர் குலாம்நபி ஆஸாத் வெளியிட்ட ட்விட்டர் தகவல் அளித்துள்ளது. பாரதிய ஜனதாவுடன் தனக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால், காங்கிரஸ் கட்சியை விட்டே விலகுவதாக அவர் காட்டமாக ட்வீட் செய்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

சோனியாவுக்கு ஆஸாத் மற்றும் கபில் சிபல் எழுதிய கருத்து வேறுபாடு கடிதங்களால் காங்கிரஸ் தரப்பில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இன்னும் சோனியா காந்தி குடும்பத்திற்கு காங்கிரஸில் அதிக செல்வாக்கு இருப்பதையும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் வேறுபாடுகளையும் களைந்து அனைவரையும் ஒன்றிணைக்க சோனியாவால் முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களின் கருத்து வேறுபாடுகளால் சோனியா காயப்பட்டிருப்பதாகவும், ஆனால் இறுதியில் அவர் நினைத்தது போலவே அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அவர் திருப்தி கொண்டதாகவும், சோனியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டி கூட்டத்தின் போது, தங்கள் மீது சுமத்தப்பட்ட ‘முதுகில் குத்துபவர்கள்’ என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக பல தலைவர்கள் பேசினர். சோனியாகாந்தியின் தலைமைக்கு எதிராக தாங்கள் போர்க்கொடி உயர்த்தவில்லை என்றும், தற்போதுள்ள சூழலில் கட்சியை பலமட்டங்களில் பலப்படுத்தி சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே தாங்கள் முறையிட்டதாக தெரிவித்தனர்.

அத்துடன் கட்சியின் நலனுக்காக சோனியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இசைவு தெரிவிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

காந்தி குடும்பத்தைத் தவிர வேறு தலைமையைத் தேர்வு செய்யும் கருத்துக்கள் காணால் போனதால், ராகுல்காந்தியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, காரியக்கமிட்டி நல்ல பலனையே அளித்துள்ளது.

சோனியாவுக்கு மாற்றாக ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என்று, சோனியாவின் பழைய விசுவாசியான அஹமது பட்டேல் வலியுறுத்தியிருந்தார். இதுபோல ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களின் வலியுறுத்தலால், தலைவர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே டிசம்பர் 2017ம் ஆண்டு பதவியேற்ற ராகுல், 2019ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானதும் பதவி விலகினார்.

அது முதல் தலைவர் பதவி குறித்த சலசலப்புகள் தொடர்ந்த நிலையில் அதற்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. ஆயினும், 23 எதிர்ப்பாளர்களை சமாதானம் செய்து மீண்டும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது காங்கிரஸுக்கு சவாலான காரியம் தான்.

இதுமட்டுமின்றி, கட்சியினர் பொதுவெளியில் கட்சி விவகாரங்களை வெளிப்படுத்துவதும், சோனியாவுக்கு எதிரான சர்ச்சையை தொடர்வதும் காங்கிரஸுக்கு தலைவலியை அதிகமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவை அனைத்திற்கும் காங்கிரஸ் மேலிடம் எப்படி தீர்வு காணப் போகிறது என்பதை அனைத்து தரப்பினரும் உற்று நோக்குகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details