வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலீபா, மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலர் ட்வீட் செய்தையடுத்து, உலகளவில் இப்பிரச்னை கவனம் பெற்றது.
இதையடுத்து, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டினர் கருத்து தெரிவிக்க தேவையில்லை என சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரணாவத், அக்ஷய் குமார் போன்ற திரைப்பிரபலங்களும் ட்வீட் செய்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாக பிரபலங்கள் தொடர்ச்சியாக ட்வீட் செய்தது, மத்திய அரசின் அழுத்தம்தாம் காரணம் என சிலர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திட மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் கூறுகையில், " சில பிரபலங்கள் ட்வீட் செய்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. ட்வீட்கள் பதிவான நேரம், ஒருங்கிணைந்த பாணி ஆகியவற்றை வைத்து பார்த்தால் இதெல்லாம் திட்டமிட்டது போல் தெரிகிறது. ட்வீட் விவகாரம் தொடர்பாக விசாரிக்க புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விவசாயிகளை அழைத்து மரியாதை செய்யுங்கள் - மோடியிடம் கோரிக்கை வைக்கும் ஓவைசி!