இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாக்டவுன் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர்.
பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால், ரயில்வே துறையின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் நேற்று (ஜூலை 28) வெளியிட்ட தகவலில், கடந்த ஆண்டு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைந்த நிலையில், இந்த ஆண்டு பயணிகள் ரயில்கள் மூலமாக 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரூ. 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பயணிகள் ரயிலில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால், நாம் அதனை சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலம் ஈடுசெய்ய வேண்டியுள்ளது. எனவே, சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா நேரத்தில், 231 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 75 விழுக்காடு இருக்கைகள் நிரம்புகின்றன.