கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்திய சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதனைத் தொடர்ந்து, சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுவருகின்றனர். ஆனால், லடாக் எல்லைப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவிவருவதால் அதனைச் சமாளிப்பதற்கு ஏதுவான உடைகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய அமெரிக்கா!
டெல்லி: எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் கடுமையான குளிரைச் சமாளிப்பதற்கு ஏதுவான உடைகளை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "முதற்கட்டமாக, கடுமையான குளிரைச் சமாளிப்பதற்கு ஏதுவான உடைகளை அமெரிக்க பாதுகாப்புப் படை வழங்கியுள்ளது. அதனை இந்திய பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திவருகின்றனர். சியாச்சின், கிழக்கு லடாக் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு வழங்கும் நோக்கில் 60 ஆயிரம் உடைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டு, சீனாவுடனான எல்லைப் பகுதியில் 90 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில், மேலும் 30 ஆயிரம் உடைகள் தேவைப்படுகின்றன. ராணுவ வீரர்களின் உடைகள் உடனடியாக கொள்முதல் செய்வதன் மூலம் மழைக்காலத்தில் அது ராணுவ வீரர்களுக்கு உதவியாக அமையும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.