குஜராத் மாநிலத்தில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 664 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 829 ஆகவும் பதிவாகியுள்ளது.
மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 85 விழுக்காட்டினர் அகமதாபாத்தைச் சோ்ந்தவர்கள். அதில் 62 விழுக்காடு உயிரிழப்புகள் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கின்றன.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி கூறியதாவது:
குஜராத் அரசுக்கு கரோனாவைக் கையாளும் திறன் போதவில்லை. கரோனாவை எதிர்த்து வெற்றிபெறும் அளவிற்கு அவர்களிடம் (குஜராத் அரசு) வியூகங்கள் இல்லை.
பிரதமர் மோடிக்கும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சொந்த மாநிலமான குஜராத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பது தெரியவில்லையா? இதனை நாட்டிற்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டிய தேவையிருக்கிறது.
மத்திய அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்திலிருக்கும் அவர்களால், தனது சொந்த மாநிலத்தின் நிலையறிந்து உதவ முடியவில்லை. ஏழை மக்களுக்கும் போதிய மருத்துவ உதவியை செய்ய முடியாமல்போகிறது எனில், இந்தியாவின் பிற இடங்களில் இருப்போருக்கு எவ்விதமான நீதியை எதிா்பார்க்க முடியும். நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவர்களிடமிருந்து எதுவும் கிடைக்கப்போவதில்லை.
இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றம், கரோனா நெருக்கடியை மாநில அரசு கையாண்டவிதம், அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்து விமர்சித்துள்ளது. கரோனா பாதிப்பு குறித்த தவறான புள்ளி விவரங்களைத் திட்டமிட்டே அரசு வெளியிட்டிருப்பதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாதுகாப்பு உபகரணம், வென்டிலேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவு அறைகள் என எதுவும் குஜராத் அரசிடம் போதிய அளவில் இல்லை. அகமதாபாத் மருத்துவமனையின் நிலை பரிதாபகரமானதாக இருக்கிறது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பிறகும்கூட, இந்த விவகாரத்தில் ஏன் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தலையிடவில்லை, குஜராத் அரசின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சுற்றுச்சூழல் துறை அமைச்சக ஒப்புதல்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!