லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தினர் 20 பேர் மரணமடைந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்தும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த விளக்கம் குறித்தும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது.
இதனை எதிர்த்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, 2005ஆம் ஆண்டு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ராஜீவ்காந்தி அறக்கட்டளை நிதியுதவி பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டினார்
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், ”2005ஆம் ஆண்டு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு 20 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டதாகக் கூறி, உண்மையை மறைத்துப் பேசுவதில் நிபுணத்துவம் பெற்ற நட்டா, அந்தப் பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிவாரணப் பணிகளுக்காகச் செலவிட்டதை ஏன் கூற மறந்துவிட்டார்.
2005 நிவாரணப் பணிக்கும், 2020 சீனா ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது சீன ஆக்கிரமிப்பை எப்படி எப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை.
20 லட்சம் ரூபாயை ராஜீவ்காந்தி அறக்கட்டளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டால். சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை இந்தியா மீட்டெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளிப்பாரா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.