புதுச்சேரி காவல்துறைக்கு இன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் துணைநிலை ஆளுநர் மாளிகை, ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் நான்கு பேர் கொண்ட குழுவினருடன் துணைநிலை ஆளுநர் மாளிகை, அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என கண்டறியப்பட்டது. இதேபோன்று ரயில் நிலையத்திலும் இக்குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சி.ஏ.ஏ. வழக்கு: பினராயி விஜயன் அரசு அறிக்கை அளிக்க ஆளுநர் மாளிகை உத்தரவு