பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே, ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே எரித்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்பட 5 பேரை இடைநீக்கம் செய்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இவர்களுக்குப் பதிலாக ஷாம்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் ஜெய்ஸ்வால் ஹத்ராஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஹத்ராஸ் கிராமத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க கிராமம் முழுவதும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.