அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், இந்திய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் நம்பகத்தன்மை மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் துரோகத்தால் அது வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து அக்கட்சித் தொண்டர்கள் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
பாஜகவின் 15ஆண்டுகால சாம்ராஜ்யம்
சிவராஜ் சிங் சவுகான் 13ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. இருப்பினும், 15 மாதத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைந்துவிட்டதால், மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிவராஜ் சிங் தனது முதல் பதவிக்காலத்தில் தன்னை வெகுமக்கள் தலைவராக காட்டிக்கொண்டார். இது, 2013ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உதவியது. மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் இருந்த அவருடைய செயல்பாட்டின் மீது 2013ஆம் ஆண்டுக்குப் பின்பு கேள்விகள் எழத் தொடங்கின.