பீகார் மாநிலம் சிதாமாஹரி மாவட்டத்தில் உள்ள போக்ஹரா என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு பிரிவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருபிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில், 15 பேர் காயமடைந்தனர்.
தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இருபிரிவினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்துசெல்ல வைத்தனர்.
இதுகுறித்து சிதாமாஹரி மாவட்ட ஆட்சியர் குமாரி ஷர்மா கூறுகையில், "மோதல் நடந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காவல் துறை அலுவலர் ஒருவர், "நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைத்த குல்தீப் பிரசாத் பேசுகையில், "ஜிட்கி கிராமத்திலிருந்து போக்ஹரா சவுக் பகுதிவரை பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். அப்போது வந்த சில சமூக விரோதிகள் எங்களை தாக்கினர்" எனக் கூறினார்.
சம்பவம் குறித்து பாஜக பிரமுகர் பவர் சாஹ் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான ஆட்சேபணைக்குரிய வாசகங்களை முழுங்கியதாகவும், அங்கிருந்து கடைகளை மூடுமாறு கடைக்காரர்களை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க : சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களுக்கு பணம்? விசாரணையை வலியுறுத்தும் கிருஷ்ண தாஸ்