தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர்கள் சட்டத்தின் பாதுகாவலர்களா அல்லது சட்டத்தை மீறுபவர்களா?

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அரசியல் மோதலில் மத்திய அரசின் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசின் முந்தைய மூன்று முன்மொழிவுகளை நிராகரித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான 21 நாள் அவகாசத்தை பின்பற்றுமாறு மாநில அமைச்சரவையை அவர் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர்கள்
ஆளுநர்கள்

By

Published : Aug 4, 2020, 10:29 PM IST

ஆட்சி அமைப்பதை உறுதி செய்வதே ஆளுநரின் பொறுப்பு, ஆனால் ஒரு அரசை உருவாக்க முயற்சி செய்யக்கூடாது என்று சர்காரியா ஆணையம் தெளிவுபடுத்தி முப்பது வருடங்களாகிறது. அரசியலமைப்பு தூண்களாகப் போற்றப்பட்ட ஆளுநர் மாளிகைகள் அற்ப அரசியல் மூலம் ஜனநாயகத்தின் பிம்பத்தை கெடுக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா வெளியேறியது கமல்நாத் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, ​​மத்திய பிரதேச ஆளுநர் சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அழுத்தம் கொடுத்தார்.

அதிகரித்து வரும் தொற்றுநோய் பற்றி கவலைப்படாமல், சிவ்ராஜ் சிங் சவுகான் மார்ச் 23 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அதே வழியில், ராஜஸ்தானின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது கட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது மற்றொரு அரசியல் நாடகம் வெளிப்பட்டது. இதன் விளைவாக, காங்கிரஸ் அவரையும் 16 சட்டமன்ற உறுப்பினர்களையும் நீக்கியது.

ராஜஸ்தானின் நிலைமை மத்திய பிரதேசத்தைப் போலல்லாமல், கெலாட் மற்றும் பைலட்டின் விசுவாசிகள் ஆகிய இருதரப்பினரும் சட்டப் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு தற்போது சாத்தியமில்லை.

இதற்கிடையில், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அரசியல் மோதலில் மத்திய அரசின் அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசின் முந்தைய மூன்று முன்மொழிவுகளை நிராகரித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான 21 நாள் அவகாசத்தை பின்பற்றுமாறு மாநில அமைச்சரவையை அவர் கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுகள் மற்றும் நிலைமை குறித்து தான் கவலைப்படுவதாக அவர் கூறினார். சபையின் கவுரவ உறுப்பினர்களின் பாதுகாப்பு என்பது சபாநாயகரின் பொறுப்பாகும். அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான் ஆளுநர் செயல்பட வேண்டும், ஆனால் சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான கெலாட் முயற்சிகளை கல்ராஜ் மிஸ்ரா தடுக்கிறார்.

முதலமைச்சர்களுக்கு பதவியேற்பு மற்றும் இரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைக்கும் ஆளுநர்களே, ஊழல் மற்றும் பிற முறைகேடுகளுக்கு குற்றவாளிகளாக இருக்கிறார்கள். உண்மையில், ஆளுநர்களைப் பற்றி குறிப்பிடும்போது, “அதிகாரத்தில் இருக்கும் கட்சியிலிருந்து நிராகரிக்கப்பட்ட, அதிருப்தி அடைந்த அரசியல்வாதிகள், வேறு எங்கும் நியமிக்கப்பட முடியாதவர்கள் நியமிக்கப்படுவார்கள். அத்தகைய நபர்கள், பதவியில் இருக்கும்போது, ​​ சார்பற்ற அரசியலமைப்பு செயல்பாட்டாளர்களாக இல்லாமல் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட முனைகிறார்கள்” என்று 1983ஆம் ஆண்டு சர்க்காரியா கமிஷன் குறிப்பிட்டது,

முன்னாள் மக்களவைச் செயலாளர் ஆச்சார்யாவின் கூற்றுப்படி, சபையின் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகருக்கு மட்டுமே உரிமை உண்டு. சபையின் நடவடிக்கைகளை பொறுத்தவரை சபாநாயகர் மீது ஆளுநருக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்று கூறியுள்ளார். 2016ஆம் ஆண்டில், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் சிங் ராவத்தை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு, உச்சநீதிமன்றம் தலையிட்டு ராவத்துக்கு இருக்கும் ஆதரவைத் தீர்மானிக்க உத்தரவிட்டது. அதே ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், சட்டமன்றக் கூட்டத்தொடரை முன்னெடுக்க பிறப்பிக்கப்பட்ட அருணாச்சல பிரதேச ஆளுநர் ஜே.பி.ராஜ்கோவா-வின் உத்தரவை ரத்து செய்தது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆளுநர் என்பவர் ஒரு பரவலான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர் அல்ல என்று கூறியுள்ளது. மேலும், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்றி சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டுவதற்கோ அல்லது கலைக்கவோ ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது என்று பெஞ்ச் மேலும் கூறியது. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவின் நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறையற்ற தன்மையை பிரதிபலிக்கின்றன என்பதை நிரூபிக்க இந்த அறிக்கைகள் போதுமானவை.

ஒரு ஆளுநர் அரசியலமைப்பின் பாதுகாவலராக செயல்பட வேண்டும். ஆனால் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவில் ஆளுநர்கள் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான சோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 நீக்கம்: காஷ்மீரின் வளர்ச்சிக்கான கதவுகளை திறந்துள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details