2050ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா எப்படி இருக்கும் என்பது தொடர்பான அறிக்கையை ஐ.நா. ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2028ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகை கிராமப் புறத்தில் இருந்து நகர்புறத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியிருக்கும். இதன் காரணமாக, நகர்புற மக்கள் தொகை 34 விழுக்காட்டிலிருந்து 52.8 விழுக்காடாக அதிகரித்திருக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நகர்புறமாக்கல் என்பது சிக்கல்கள் நிறைந்த விஷயமாக மாறிவிட்டது. கிராமப் புறங்களை எடுத்துக் கொண்டால் போதிய வசதிகள் இல்லை. நகர்ப்புறங்களில் போதிய உற்பத்தி இல்லை. மக்கள்தொகை அதிகரிப்பு எழுப்பிய அதிர்வலை மற்றும் ஏராளமானோர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து, உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்கள் நிலையான நகரமயமாக்கலின் சவாலை எதிர்கொள்கின்றன.
இந்தியாவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாட்டின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு பேர் 2030-க்குள் நகரங்களில் வசிப்பார்கள் என்றும், 2050ஆம் ஆண்டில் 50சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் குவிந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் நகர்ப்புற மக்களைப் பற்றி தொலைநோக்குடன் 3 திட்டங்களைத் தொடங்கியது.
இந்த 3இல், ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் மற்றும் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT- Atal Mission for Rejuvenation and Urban Transformation) ஆகியவற்றின் கடைசி கட்டம் அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும்.
சீர்மிகு நகரங்கள் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி மிஷன்) ஜனவரி 2016இல் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பல நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களை மேம்படுத்த 5 வருட கால அவகாசம் ஒதுக்கப்பட்டது. “100 ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன்” பணிகளில் 50சதவீதம் 2020 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று அமைச்சர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 500 நகரங்களின் வளர்ச்சிக்காக ரூ. 50ஆயிரம் கோடியை அடல் மிஷன் திட்டத்துக்கு ஒதுக்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது.
மேற்கு வங்கம், கேரளா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் நிலைமை சிறப்பாக இருந்தாலும், பீகார் மற்றும் அசாமில் வளர்ச்சி பணிகள் குறைவாக உள்ளது. முன்மொழியப்பட்ட திட்டங்களின் மந்தமான அமலாக்கத்தை மறுஆய்வு செய்யாமல், இறுதி கட்ட அமலாக்கம் நகரங்களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது சந்தேகமே.
நகரமயமாக்கல் குடிமக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளையும் வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். நகர்ப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அவர்களின் நோக்கம்.
அடல் மிஷன் திட்டத்தின்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஆந்திராவில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு உலக வங்கி அடல் மிஷன் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டது.