இந்திய சர்வேயர் ஜெனரலாக 1830 முதல் 1843 வரை பணியாற்றியவர் ஜார்ஜ் எவரெஸ்ட். உலகத்திலேயே மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்டுக்கு, இப்பெயர் வைக்கப்பட்டது ஜார்ஜ் எவரெஸ்ட் பெயரிலிருந்துதான். அவர் தனது வாழ்நாளில் பெரும்பான்மையை முசோரி பகுதியில்தான் கழித்தார். 1832ஆம் ஆண்டு முசோரியில் இவரால் 172 ஏக்கர் பரப்பளவில் பூங்காவும், வீடும் அமைக்கப்பட்டது. அந்த வீடு இயற்கை சீற்றத்தால் சிதலமடைந்து காணப்படுகிறது. சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
ஜார்ஜ் எவரெஸ்ட் வீட்டை புதுப்பிக்கும் பணி மீண்டும் தொடக்கம்!
டேராடூன்: 172 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜார்ஜ் எவரெஸ்ட் வீட்டை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.
அருண் கன்ஷ்டிரக்ஷன் நிறுவனம் இந்த வீட்டை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஜார்ஜ் எவரெஸ்ட் வீட்டை புதுப்பிப்பதற்கு 23.70 கோடி ரூபாய் ஆகும் என அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது. 2019, ஜனவரி 18ஆம் தேதி சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பல் மகாராஜ் இந்த புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதியே இதன் பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா சூழல் காரணமாக பணிகள் தள்ளிபோனது. தற்போது இப்பணி மீண்டும் தொடங்கியுள்ளது. 2021 மார்ச் மாத இறுதிக்குள் இப்பணிகள் முடியும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் குல்தீப் ஷர்மா, பெரிய மற்றும் சிறிய அருங்காட்சியகத்தை எழுப்பி, பழைய ஜார்ஜ் எவரெஸ்ட் வீடு போன்ற தோற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். பூங்காவுக்கும், வீட்டுக்கு வருவதற்கான சாலைக்கும் சிறப்பு கவனம் செலுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.