தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தியாகிரகம்: வெறுப்புக்கு எதிராக அன்பின் ஆயுதம்

சத்தியாகிரகம் மூலம் சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்திக்காட்டி, அநீதிக்கு எதிராக அகிம்சை வழியில் மனிதர்கள் போராடி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை மனித குலத்திற்கு அளித்தவர் காந்தியடிகள் என காந்திய ஆர்வலர் நசிகேதா தேசாய் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரை இதோ.

Gandhi

By

Published : Sep 7, 2019, 6:29 PM IST

50 வருடங்களுக்கு மேலாக சத்தியத்துடன் சுயபரிசோதனை மேற்கொண்டு பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறக் காந்தி பெரும்பங்காற்றினார். அதேவேளையில் நாட்டு முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான பணிகளையும் காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டவே காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அங்கு நிறவெறியின் கோரத்தை காந்தி நேரடியாகச் சந்திக்கவே தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி அங்குத் தொடங்கினார். அதன் பின்னர் அகிம்சையை போராட்ட வழியாக மட்டும் கருதாமல் வாழ்க்கையின் தத்துவமாகவும் ஏற்றுக்கொண்டார்.

சத்தியாகிரகம் என்றால் அநீதியை பொறுத்துக்கொள்வது அல்ல, அதைக் கண்ணியம் மிக்க முறையில் எதிர்கொண்டு போராடுவதே ஆகும் என்கிறார். அநீதி இழைப்பவர்களை பழிவாங்குவது அல்ல சத்தியாகிரகம், சமூகத்தில் இருக்கும் நன்மை தீமை இரண்டையும் விருப்பு வெறுப்பின்றி அணுகி சீர்செய்வதே சத்தியாகிரகியின் கடமையாகக் கருதினார் காந்தி.

சத்தியகிரக போராட்டத்தில் காந்தி

தென்னாப்பிரக்காவிலிருந்து இந்தியா வந்தபின் காந்தி தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை பீகார் மாநிலம் சம்பாரன் கிராமத்தில் நடத்தினார். அதன்பின் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களை 30 வருடங்களாக முன்னின்று நடத்தினார். இந்த சத்தியாகிரக போராட்டங்கள் வெறும் எதிர்ப்பு இயக்கமாக மட்டுமில்லாமல் சமூக நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, தற்சார்பு வாழ்க்கை முறை போன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

போராட்டம் என்பது எதிரியை வீழ்த்தும் ஆயுதமாக மட்டும் இல்லாமல், போராடுபவர்களை மேம்படுத்தும் கருவியாக சத்தியாகிரகத்தின் மூலம் மாற்றிக் காட்டியவர் காந்தி.

ABOUT THE AUTHOR

...view details