கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பரப்புரை இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.ஒன்றாக கரோனாவை வெல்வோம் என்ற பிரதமரின் ட்வீட்டில் இருந்த #Unite2fightcorona என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் விழிப்புணர்வு பரப்புரையில் பொறுப்புள்ள அனைத்து குடிமக்களும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஜல் சக்தி கஜேந்திர சிங் சேகாவத் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "இன்று உலகம் முழுவதும் நெருக்கடியில் உள்ளது. வைரஸை தடுப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் செய்தபோதும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அலட்சியமாக உள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் செல்வதையும், தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதை பார்க்க முடிகிறது" என்றார்.
மேலும், "பிரதமர் தலைமையிலான கரோனா பரப்புரை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக ஏழு நாள்கள், நாம் அனைவரும், பொறுப்புள்ள மக்களாக விழிப்புணர்வை ஏற்படுத்தி சரியான செய்தியை பரப்புவதன் மூலம் கரோனாவைத் தடுக்க முடியும். முகக்கவசத்தை பயன்படுத்துங்கள், தகுந்த இடைவெளியை பின்பற்றுங்கள், உங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் பின்பற்றவதன் மூலம், கரோனாவை எளிதில் தோற்கடிக்க முடியும்.
பண்டிகை காலம் வருவதால், மக்கள் அலட்சியமாக இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் பிரதமர் மோடி, கரோனா விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார்